← 2Kings (15/25) → |
1. | இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான். |
2. | அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள். |
3. | அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். |
4. | மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். |
5. | கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான். |
6. | அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
7. | அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
8. | யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி, |
9. | தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை. |
10. | யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
11. | சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
12. | உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று. |
13. | யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான். |
14. | காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
15. | சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
16. | அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான். |
17. | யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். |
18. | இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான். |
19. | அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தைத் தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான். |
20. | இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான். |
21. | மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
22. | மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
23. | யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, |
24. | கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை. |
25. | ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
26. | பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
27. | யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, |
28. | கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை. |
29. | இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான். |
30. | ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
31. | பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
32. | இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான். |
33. | அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள். |
34. | அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான். |
35. | மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான். |
36. | யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. |
37. | அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார். |
38. | யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். |
← 2Kings (15/25) → |