← Psalms (94/150) → |
1. | நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். |
2. | பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும். |
3. | கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? |
4. | எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? |
5. | கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். |
6. | விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: |
7. | கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள். |
8. | ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? |
9. | காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? |
10. | ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ? |
11. | மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். |
12. | கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, |
13. | சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். |
14. | கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். |
15. | நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள். |
16. | துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? |
17. | கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும். |
18. | என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. |
19. | என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. |
20. | தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? |
21. | அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். |
22. | கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். |
23. | அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார். |
← Psalms (94/150) → |