← Numbers (30/36) → |
1. | மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: |
2. | ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன். |
3. | தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால், |
4. | அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும். |
5. | அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். |
6. | அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால், |
7. | அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும். |
8. | அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். |
9. | ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும். |
10. | அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், |
11. | அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும். |
12. | அவளுடைய புருஷன் அவைகளைக் கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். |
13. | எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும். |
14. | அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான். |
15. | அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார். |
16. | புருஷனையும் ஸ்திரீயையும், தகப்பனையும் தகப்பனுடைய வீட்டில் சிறுவயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே. |
← Numbers (30/36) → |