← Numbers (20/36) → |
1. | இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள். |
2. | ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். |
3. | ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். |
4. | நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன; |
5. | விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். |
6. | அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. |
7. | கர்த்தர் மோசேயை நோக்கி: |
8. | நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். |
9. | அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். |
10. | மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, |
11. | தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. |
12. | பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். |
13. | இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது. |
14. | பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: |
15. | எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. |
16. | கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். |
17. | நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான். |
18. | அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். |
19. | அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள். |
20. | அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். |
21. | இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள். |
22. | இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். |
23. | ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: |
24. | ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. |
25. | நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி, |
26. | ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார். |
27. | கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். |
28. | அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். |
29. | ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள். |
← Numbers (20/36) → |