← Numbers (13/36) → |
1. | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2. | நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். |
3. | மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள். |
4. | அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா. |
5. | சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத். |
6. | யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப். |
7. | இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால். |
8. | எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா. |
9. | பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி. |
10. | செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல். |
11. | யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி. |
12. | தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல். |
13. | ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர். |
14. | நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி. |
15. | காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல். |
16. | தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான். |
17. | அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, |
18. | தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், |
19. | அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், |
20. | நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது. |
21. | அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து, |
22. | தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. |
23. | பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்; மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். |
24. | இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது. |
25. | அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். |
26. | அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். |
27. | அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. |
28. | ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். |
29. | அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். |
30. | அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். |
31. | அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். |
32. | நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். |
33. | அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். |
← Numbers (13/36) → |