Lamentations (3/5)  

1. ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.
2. அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
4. என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
5. அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.
6. பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
7. நான் புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.
8. நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
9. வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
10. அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
11. என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.
12. தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
13. தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
14. நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
15. கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
16. அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
17. என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
18. என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
19. எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
20. என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
21. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
22. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
24. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
25. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
26. கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
27. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
28. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.
29. நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
30. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
31. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
32. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
34. ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
35. உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
36. மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
37. ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
38. உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
39. உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
42. நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
43. தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
44. ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45. ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
46. எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
47. திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.
48. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
49. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,
50. என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.
51. என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
52. முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள்.
53. காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
54. தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.
55. மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.
56. என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
57. நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
58. ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
59. கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
60. அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
61. கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
62. எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
63. அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
64. கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
65. அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
66. கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

  Lamentations (3/5)