← Job (4/42) → |
1. | அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: |
2. | நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? |
3. | இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர். |
4. | விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். |
5. | இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். |
6. | உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ? |
7. | குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும். |
8. | நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். |
9. | தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள். |
10. | சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்டசிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம். |
11. | கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம். |
12. | இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது. |
13. | மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, |
14. | திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது. |
15. | அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது. |
16. | அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: |
17. | மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? |
18. | கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, |
19. | புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? |
20. | காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள். |
21. | அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான். |
← Job (4/42) → |