← Jeremiah (40/52) → |
1. | பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்ட பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்: |
2. | காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார். |
3. | தாம் சொன்னபடியே கர்த்தர் வரப்பண்ணியுமிருக்கிறார்; நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது. |
4. | இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான். |
5. | அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான். |
6. | அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான். |
7. | பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவச் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, |
8. | அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே. |
9. | அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும். |
10. | நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான். |
11. | மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது, |
12. | எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதாதேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள். |
13. | அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து, |
14. | உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை. |
15. | பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான். |
16. | ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான். |
← Jeremiah (40/52) → |