← Genesis (26/50) → |
1. | ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். |
2. | கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. |
3. | இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். |
4. | ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், |
5. | நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். |
6. | ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். |
7. | அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். |
8. | அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். |
9. | அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். |
10. | அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். |
11. | பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான். |
12. | ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; |
13. | அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். |
14. | அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, |
15. | அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். |
16. | அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப்பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். |
17. | அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, |
18. | தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். |
19. | ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். |
20. | கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான். |
21. | வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். |
22. | பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். |
23. | அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். |
24. | அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். |
25. | அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். |
26. | அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். |
27. | அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். |
28. | அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். |
29. | நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். |
30. | அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். |
31. | அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். |
32. | அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். |
33. | அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது. |
34. | ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். |
35. | அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள். |
← Genesis (26/50) → |