← 2Chronicles (29/36) → |
1. | எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள். |
2. | அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். |
3. | அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து, |
4. | ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, |
5. | அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள். |
6. | நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள். |
7. | அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள். |
8. | ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார். |
9. | இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள். |
10. | இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன். |
11. | என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான். |
12. | அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும், |
13. | எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும், |
14. | ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் ஆகிய இந்த லேவியர் எழும்பி, |
15. | தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள். |
16. | ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள். |
17. | முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள். |
18. | அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து, |
19. | ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தம்பண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள். |
20. | அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான். |
21. | அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான். |
22. | அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். |
23. | பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள். |
24. | இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள். |
25. | அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது. |
26. | அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள். |
27. | அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத் தொடங்கினது. |
28. | கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள். |
29. | பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். |
30. | பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். |
31. | அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள். |
32. | சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின. |
33. | அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது. |
34. | ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள். |
35. | சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது. |
36. | தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று. |
← 2Chronicles (29/36) → |