← 1Samuel (24/31) → |
1. | சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. |
2. | அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். |
3. | வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். |
4. | அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். |
5. | தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது. |
6. | அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி, |
7. | தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான். |
8. | அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி, |
9. | சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? |
10. | இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன். |
11. | என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். |
12. | கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. |
13. | முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. |
14. | இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? |
15. | கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். |
16. | தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, |
17. | தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். |
18. | நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை. |
19. | ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. |
20. | நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன். |
21. | இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். |
22. | அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள். |
← 1Samuel (24/31) → |