← 1Kings (17/22) → |
1. | கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். |
2. | பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: |
3. | நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. |
4. | அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். |
5. | அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். |
6. | காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். |
7. | தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று. |
8. | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: |
9. | நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். |
10. | அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். |
11. | கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். |
12. | அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். |
13. | அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். |
14. | கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். |
15. | அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். |
16. | கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. |
17. | இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. |
18. | அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள். |
19. | அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து: |
20. | என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு; |
21. | அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். |
22. | கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது; அவன் பிழைத்தான். |
23. | அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான். |
24. | அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள். |
← 1Kings (17/22) → |